அன்புள்ள எழுத்தாளருக்கு,
உங்களுக்கு விருப்பமான ஒரு மொழியில் கதை ஒன்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் தாய் மொழியில் அதை எழுதியிருக்கலாம். இப்பொழுது அதை இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய நிலை. அது உங்கள் மொழியுடன் அவ்வளவாக ஒற்றுமைகள் இல்லாத மொழியாகக் கூட அது இருக்கலாம். கதையின் தோற்றமும் தொடரியலும் சொல் வடிவும் வாக்கிய அமைப்பும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கலாம்.
மேலும் மொழிப்பெயர்க்கப்பட்டக் கதையைப் படிக்கும் வாசகர் இவ்வுலகின் ஏதோ ஒரு பகுதியில் வாழ்பவராகவும், உங்கள் மொழி வாசகருக்கு இருக்கும் கலாச்சார அறிதலும் புரிதலும் இல்லாதவராகவும் இருக்கக்கூடும். எவ்வளவு தான் கவனமாக வார்த்தைகளையும் வாக்கியங்களையும் உங்கள் மொழியிலிருந்துப் புது மொழிக்கு எடுத்துச் சென்றாலும், உங்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் – கதையில் மறைந்திருக்கும் நுணுக்கங்கள் புது வாசகருக்குப் போய் சேர்ந்ததா? உங்களின் கலக்கம் நியாயமானது தான்.
மொழிப்பெயர்ப்பாளராகிய எனக்கு உங்கள் சந்தேகம் புரிகிறது. இந்நிலை எனக்கு ஒன்றும் புதியதல்ல. நான் வங்காள மொழியிலிருந்து ஒரு கதையை ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்யும்போது என் மனதில் ஏகப்பட்டக் கவலைகள் தலைத்தூக்கும்: நான் வாழும் மொழியில் எழுதியக் கதையிலிருக்கும் எல்லா அம்சங்களையும் என்னால் புது மொழிக்கு கொண்டுசெல்ல முடியுமா? எந்த வகையான ஆங்கிலத்தை உபயோகிப்பது? எனக்கே உரிய பாணியில் உபயோகிக்கும் ஆங்கிலத்தையா அல்லது வாசகருக்குப் பழகிய ஆங்கிலத்தையா?
நிகரான வார்த்தைகளும் சொற்றொடர்களையும் கண்டுப்பிடிப்பது கடினமான வேலையில்லை. எனினும், சில சமயங்களில் நான் மொழிபெயர்க்கும் மொழியில் நேரடியானச் சமமான சொற்கள் இருக்காது. ஆனால் அதன் பொருளை எப்போதும் எடுத்துரைக்கமுடியும் — தேவையான இடங்களில் அந்தச் சொல்லையோ சொற்றொடரையோ விரிவுபடுத்தி விளக்கிவிடமுடியும். இதை ‘மறை விளக்கம்’ (stealth gloss) என்று அழைப்பார்கள். இப்படிப்பட்ட விளக்கங்கள் உரையின் நடையுடன் கலந்துவிடுவதால் அடிக்குறிப்புகளாகத் தோன்றாமல் அவை இயல்பாகவே உரையின் ஓட்டத்தில் கலந்துவிடும்.
சில மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு சில குறிப்பிட்ட சொற்களையும் சொற்றொடர்களையும் மொழிபெயர்க்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால், அவை மொழிபெயர்க்கப்பட்ட மொழிக்கு வெளியே உள்ள விஷயங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை வாசகர்களால் உணரமுடியும். இவ்வாறு, வாசகருக்கும் அறியாத கருத்துக்கும் இடையே தோன்றும் தூரமானது வாசிப்பின் அனுபவத்தை மாற்றாமல் இருக்கிறதா என்பது முக்கியம்.
நான் ஒரு கதையை மொழிபெயர்க்கும் போது முதலில் கவனம் செலுத்துவது, அக்கதையின் ‘மூல’ மொழிக்கும் அதன் நிலையான வடிவத்திற்கும் உள்ள தொடர்புதான் (அதாவது, பெரும்பாலோர் எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும் வடிவம்). இக்கதை மொழியை வித்தியாசமாகப் பயன்படுத்துகிறதா? மொழிநடை அசாதாரணமானதாக இருக்கிறதா? இது ஒரு பரிசோதனை (experimental) முயற்சியா என்பதை கவனிப்பேன். இலக்கு மொழியிலும் (அதாவது என் மொழிபெயர்ப்பிலும்), மூல மொழியில் எழுத்தாளர் மொழியை எப்படிக் கையாண்டிருக்கிறாரோ அதே போன்ற உறவைத் தக்கவைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். அவ்வாறு செய்யாவிடில் கதையானது அதன் இலக்கு மொழியில் தனது உண்மையான நிலையிலிருந்து வெகுவாக விலகிவிடும் என்பது உறுதி.
அடுத்ததாக, கதையின் வாசிப்பு அனுபவம் அதை எழுதிய மொழியில் எவ்வாறு உள்ளது? வாசகரால் எளிதாக வாசிக்கமுடிகிறதா? அல்லது அவர்கள் என்ன வாசிக்கிறார்கள் என்பதை பற்றி சிந்திக்க வைக்கப்படுகிறார்களா? இயன்றவரை அதே வாசிப்பு அனுபவங்களை மீண்டும் உருவாக்குவதே என் மொழிபெயர்ப்பின் முயற்சி.
இறுதியாக, ஒரு புதிய மொழியில் கதையை கொண்டு செல்வதற்கு முன், அதன் மொழிபெயர்ப்பாளர் கதையை எவ்வாறு வாசித்து புரிந்துகொள்கிறார் என்ற கேள்வியை அவதானிக்கவேண்டும். இது ஒரு சிக்கலான கேள்வியும் கூட. எனது மொழிப்பெயர்ப்பின் நோக்கம் என்னவென்றால், ஒரு கதை எவ்வாறு மூல உரையில் அநேக வழிகளிள் வாசிக்கபடுகின்றதோ, அதை போலவே எனது மொழிபெயர்ப்பையும் எண்ணற்ற வழிகளில் வாசிக்க அனுமதிப்பதே. மொழிபெயர்ப்பின் எண்ணம் வாசிக்கும் விதங்களை சுருக்குவது அல்ல, மாறாக அவற்றை தக்கவைப்பதும், மேலும் சில சந்தர்ப்பங்களில் அவற்றை விரிவுபடுத்துவதும் தான். என்னைப் பொருத்தவரை, கதை மொழிபெயர்க்கப்பட்ட மொழியிலேயே தான் படைக்கப்பட்டது என்ற மாயையை ஒரு மொழிபெயர்ப்பு உருவாக்கிவிடக்கூடாது என்பது மிக முக்கியம். அதே சமயம், இதை வாசகருக்கு நினைவூட்டுவதற்காக, ஆங்கில மொழியின் பயன்பாட்டை நான் வேண்டுமென்றே சிதைக்கமாட்டேன். உண்மை என்னவென்றால், ஒரு எழுத்தாளர் தன் படைப்பை, மூல மொழியின் அம்சங்களை இசைக் குறிப்புகளாகக் கருதி, ஒரு இசைத் தொகுப்பைப் போல உருவாக்குகிறார். மொழிபெயர்ப்பு என்பது அதே குறிப்புகளை வேறு ஒரு இசைக்கருவியில் வாசிப்பதை போன்றது, ஆனால் அக்குறிப்புகள், புதிய இசைக்கருவியின் அமைப்பிற்கு ஏற்ப மாற்றம் பெறுகின்றன, அவை ஒருபோதும் அதே இசைக்கருவியின் ஒலிபோல் ஒலிக்காது.
இறுதியாக, அன்புள்ள எழுத்தாளரே, உங்கள் கதை அகராதியில் தோன்றும் வெறும் சொற்களின் அர்த்தங்கள் அல்ல – அதற்கு உயிரூட்டும் பிற அம்சங்களும் உடையது. மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பு, நீங்கள் எழுதிய கதையின் அச்சுப் பிரதிபலிப்பாக ஒருபோதும் இருக்காது; ஏனெனில் ஒவ்வொரு புதிய மொழிக்கும் தனித்துவமான செயல்பாடுகள் இருக்கின்றன. அதே சமயம், மொழிபெயர்ப்பு அந்தக் கதைக்குப் புத்துயிர் தந்து, நீங்கள் படைத்த உயிர்ப்புள்ளக் கதையைப் போலவே துடிப்பான புதிய வாழ்க்கையை அளிக்கும். எனவே, மொழிபெயர்ப்பாளரை நம்புங்கள்.
மொழிபெயர்த்தவர் ஜனனி அம்பிகாபதி
2025-ன் காமன்வெல்த் சிறுகதைப் போட்டிக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. தமிழிலும் தங்கள் சிறுகதைகளைச் சமர்ப்பிக்கலாம். தங்கள் சிறுகதையைக் கட்டணம் ஏதுமின்றி இங்கே